Friday, October 29, 2021

"ஏளன கொழுப்பு" - ஆகாஷ்

"அங்க ஏன்டா குப்பைய போடுற? அது மக்கள் வாழுர பகுதி டா!"என்று கேட்டதற்கு, "குப்பைமேட்டுல வீடு கட்டி குடிபோயிட்டு குப்பை பொட்றாங்கனு குத்தம் சொல்றது எவ்ளோ அபத்தமா இருக்கு" என்று அந்த நண்பர் பதில் கூறிவிட்டுச் சிரித்தார். பின் அந்த நண்பருடன் இரயில் ஏறிச் சென்றேன். கைத்தட்டும் சத்தம். "வந்துட்டாலுங்க, கை கால் நல்லா இருக்கு, ஆனா பிச்ச எடுக்குறது" என்று சொல்லிவிட்டுச் சலித்துக்கொண்டார். பின் தன் ஐ ஃபோனை எடுத்து செய்திகளைப் புரட்டினார். "பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பு என்பது போன்ற கட்டமைப்பினை கொண்டுள்ள 'நீட்' ஒரு சமூக அநீதி" என்று ஒரு தலைப்பு இருந்தது. "ஹுஹ்! எல்லார்கிட்டயும் இப்போ ஸ்மார்ட் ஃபோன் வந்துருச்சு, அதுல படிக்க வேண்டித்தானே?" என்று சொல்லிச் சலித்தார். பின் இரயிலிருந்து இறங்கி சாலையில் நடந்து வந்தோம். அப்போது எதிரே "தலித்துகள் எழுச்சி மாநாடு" என்று ஒரு பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அதைக் கண்ட அந்த நண்பர் "இவனுங்க தான் இட ஒதுக்கீட்டுல வாழுறாங்கல, அங்க போய் சாதி வேணாம்னு சொல்லவேண்டித்தானே?" என்றார். 

இதை எல்லாம் கேட்டு என் மனம் நொந்துபோனது. பாதிப்பைப் பற்றியும் பாதிப்பின் காரணம் பற்றியும்  பாதிப்பை உண்டாக்கியவனைப் பற்றியும் கேள்வி எழுப்பாத இவர்கள், தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களையே கேள்வி கேட்டுக் கொல்லுகிறார்கள்
இதற்கெல்லாம் பதில்கள் இல்லையா? இருக்கின்றது. அதைக் கேட்கும் பொறுமை தான் பலருக்கில்லை. சிலருக்கு உண்மை தெரிந்தும் வன்மம் கொண்டு இதனைப் பரப்புவார்கள். 

சென்னையின் பூர்வ குடிகளாக நாம் கருதப்படுபவர்கள், மீனவர்களும் மற்றும் கூவ நதியோரத்தில் குடிசை கட்டி வாழும் உழைக்கும் மக்களும் தான். வெள்ளையர் காலம் வரை வெளியேற்றப்படாத இந்த பூர்வ குடிகள், சுதந்திரத்திற்குப் பிறகே அழுக்காகவும், நாற்றமாகவும் கருதப்பட்டு, "தூய்மை" என்னும் பெயரால் வெளியேற்றப்படுகிறார்கள். சென்னையில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டிடமும், இந்த உழைக்கும் மக்கள் பலரின் உடல், உரிமை, உழைப்பு, உறைவிடம் என்று அனைத்தையும் பிடுங்கிவிட்டு, அதற்கு ஈடு என்னும் பெயரில் நகரில் அவர்கள் பார்த்த வேளையிடங்களில் இருந்தும், படிக்கும் கல்வி நிலையங்களிலிருந்தும் பத்துப் பன்னிரண்டு கிலோமீட்டர் தள்ளிக் குடியமர்த்தப் படுகிறார்கள். பல குப்பங்கள் பாதியழிந்த குப்பை கூடங்களாகக் காட்சியளிக்கின்றன. பல குப்பங்கள், முழு குப்பைமேடாக உறுமாறியும் விட்டன. அந்தக் குப்பைகளைப் போட்டவர்கள் அந்த உழைக்கும் வர்க்கத்தினர் அல்ல, வாய்கிழியப் பேசும் , நீயும் நானும் தான். 

திருநங்கை/திருநம்பிகளுள் பலர் இன்னமும் பாலியல் தொழில் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு தனி கழிவறை கூட நம் சமூகத்தில் எனக்குத் தெரிந்த வரை இல்லை. ஆண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை விடப் பெண்களுக்குக் குறைவு. அதைவிடக் குறைவான வாய்ப்புகளே திருநங்கை/திருநம்பிகளுக்குக் கிடைக்கிறது. அப்படியே வேலை கிடைத்தாலும் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இப்படி ஒரு கேடுகெட்ட சமுதாய கட்டமைப்பை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததில் உனக்கும் எனக்கும், இந்த மண்ணில் வாழும் அனைவருக்கும் மிகப்பெரிய பங்குள்ளது. அவர்களைப் பார்த்துப் பாவப்படக் கூட நமக்கு ஒரு சதவீதம் கூட தகுதி இல்லை. குற்றவுணர்ச்சி கொள்ளல் வேண்டும். 

நீட்டை பற்றிச் சொல்லவேண்டுமானால், எளிதில் ஒற்றை வரி பதிலாகச் சொல்லிவிடலாம். இந்த உலகில், இலட்சக் கணக்கில் விலை போகும் எந்த பொருளும் இலவசமாகக் கிடைக்காது. அப்படிக் கிடைத்தாளும் அதில் கலப்படம் இருக்கும். இலட்சக் கணக்கில் செலவு செய்து அந்த பொருளை நுகர்வோர் பெரும் வசதிகளைக் காட்டிலும் இலவசமாக நுகர்வோர் பெரும் வசதிகள் மிகவும் கடுமையான வேறுபாடுகளைக் கொண்டுள்ளதாக இருக்கும். அப்படி வேறுபாடுகள் இருக்கும் ஒரு சூழலில் இருவருக்கும் ஒரே தேர்வு என்பது சமூக அநீதியன்றி வேரென்ன?

இட ஒதுக்கீடு பற்றி எத்தனை ஆட்கள் புரியவைத்தாளும் புரிந்துகொள்ளத் தயாராக இல்லாத அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லாதவர்களாகத்தான் இந்த அமைப்பைக் குற்றம் சொல்லிக் காலம் தள்ளுகிறார்கள். இரண்டாயிரம் வருடங்களாகக் கல்வி, வேலைவாய்ப்பு என்று பல இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட வகுப்புகளின் வாய்ப்பை மீட்டெடுக்கவே இந்த அமைப்பு இன்னமும் நடைமுறையில் உள்ளது. சாதி என்னும் சமூகத்தின் ஆணிவேர்வரை பரவியுள்ள ஒரு கொடூர வியாதி அழிய, அனைத்து வகுப்பு மக்களும், அனைத்து துறைகளிலும், சரி சமமான சமூகச்சூழல் நிலையில் உட்கார்ந்த பின்பு தான் இந்த அமைப்பைத் தகர்ப்பதற்கான பேச்சுக்கள் தொடங்கப்படவே வேண்டும். "நான் சாதிப் பார்ப்பதில்லை, நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்" என்று கேட்டால் , நீ சாதிப் பார்க்காவிட்டாலும், சாதி மூலமாக வரும் சலுகைகளையும், பயன்களையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தெரிந்தோ, தெரியாமலோ, நீ அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றாய். அந்த சலுகைகளையும் பயன்களையும் அவர்களுக்கு வாங்கித்தரும் அமைப்புதான் இட ஒதுக்கீடு.

இன்னொரு முறை, விளிம்பு நிலை மக்களைக் காரணமின்றி குறைகூறும் முன், உன் வீட்டிலிருந்து உனக்குக் கிடைக்கு அனைத்து வசதிகளும் திடீரென்று கிடைக்காவிட்டால், உன் வாழ்க்கை எப்படி வலுவற்று நிற்கும் என்பதை யோசித்துப்பார்த்துவிட்டுப் பேசு. 

No comments:

Post a Comment

AI replacing labour and the idea of a "commune"

Written by Aakash A coworker and I were discussing the state and its political parties earlier, and our discussion eventually moved on to th...